ஜம்மு-காஷ்மீரில் தொடரும் பனிச்சரிவு…. மேலும் ஒரு தமிழக வீரர் பலி!

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்.

எல்லையோர மாவட்டமான பந்திப்போராவின் குரேஸ் பகுதியில் கடந்த 25-ந் தேதி கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள ராணுவ முகாமுக்கு திரும்பி கொண்டிருந்த வீரர்கள் மீது இந்த பனிக்கட்டிகள் விழுந்து மூடின. இதில் 15 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 15 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அதே போல், மீண்டும் மச்சில் செக்டாரில் கடந்த 28-ம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 ராணுவ வீரர்கள் சிக்கி கொண்டனர். பெரும் போராட்டத்திற்கு பின்னர் 5 ராணுவ வீரர்களும் கடந்த சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த 5 பேரும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான தாமோதரக் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள கே.வெள்ளாகுளத்தை சேர்ந்த தாமோதரக் கண்ணன் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்நிலையில் ஏற்கனவே பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த திருமங்கலம் அருகே உள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டியின் உடல் இன்னும் வராத நிலையில் அதே பகுதியில் மேலும் ஒரு ராணுவவீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.