சாலையில் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனுக்கு பரிதாபப்பட்டு லிப்ட் கொடுக்க நினைத்ததால், இரண்டு செல்போன்கள், லேப்டாக் உள்ளிட்டவைகளை வழக்றிஞர் இழந்த சம்பவம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிலையில், திமுக பிரமுகர் ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்ற ஒருவர், திமுக பிரமுகரை கொலை செய்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், கே.கே. சாலை கணபதி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல். இவரது மகன் லெனின் பாண்டியன். இவர் இன்று காலை திருவாமத்தூருக்குச் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்ததாக கூறப்படுகிறது.

விழுப்புரத்துக்கும் திருவாமத்தூருக்கும் இடையே சானத்தோப்பு என்னும் பகுதியில் இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தபோது, லெனின் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த அந்த மர்ம நபர் கத்தியை எடுத்து லெனினின் வயிற்றிலும் விலா எலும்பிலும் சரமாரியாகக் குத்தியதாக கூறப்படுகிறது. 

இதனால் நிலை தடுமாறி லெனின் கீழே விழுந்தார். அப்போது, பைக்கில் உடன் வந்த மேர்ம நபர் தப்பியோடி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே லெனின் உயிரிழந்துள்ளார். இது குறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லெனினுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர் லிப்ட் கேட்டு வந்தவரா? அல்லது அவருக்கு அறிமுகமானவரா? என்பது பற்றி  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

படுகொலை செய்யப்பட்ட லெனின், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌத சிகாமணிக்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கொலை செய்யப்பட்ட திமுக நகர செயலாளர் செல்வராஜின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.