திருநெல்வேலி மாவட்டத்தில், அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்ட அன்றே மாணவர்களுக்கு அடுத்த பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

தமிழகத்தில் பள்ளி மாணவர் - மாணவிகளின் புத்தக சுமையைக் குறைக்கும் வகையில் பாடப் புத்தகங்களை மூன்று பருவங்களாகப் பிரித்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, இரண்டாம் பருவத் தேர்வுகள் (அரையாண்டு) கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றன.

இந்தாண்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு வினாத்தாளும் மாநிலம் முழுவதும் பொதுவானதாக அமைக்கப்பட்டிருந்தது.

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

திருநெல்வேலி, சேரன்மகாதேவி, தென்காசி கல்வி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர் - மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் இலவசமாக திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.

இதுகுறித்து கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகையில், “தேவையான பாடப் புத்தகங்கள் விடுமுறைக் காலத்திலேயே அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான திருப்புதல் தேர்வுகளை நடத்தி,
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டில் அதிக தேர்ச்சி விகிதம் இம்மாவட்டத்திற்கு கிடைக்கச் செய்ய வேண்டுமென அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்றுத் தெரிவித்தனர்.