கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சையளிக்க மறுத்து விரட்டியடித்ததால் முதியவர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் பரிதாபமாக இறந்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு, நீரிழிவு நோய் சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.

இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தினசரி இங்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். காலை 11.50 மணி என்பதால், ஓ.பி. சீட் வழங்கும் பிரிவில் இருந்த ஊழியர்கள், ‘‘ஓ.பி. சீட் வழங்குவதற்கான நேரம் முடிந்துவிட்டது. நாளைக்கு வாருங்கள்,’’ என கூறியுள்ளனர்.

அதற்கு அவர், ‘‘கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் வலி மிகுதியாக உள்ளது. எனவே, டாக்டரை பார்க்க அனுமதியுங்கள்,’’ என கெஞ்சியுள்ளார். அதை ஏற்காத மருத்துவமனை ஊழியர்கள், ‘‘ஒருமுறை சொன்னா புரியாதா...?. போங்க... போயிட்டு நாளைக்கு வாங்க,’’ என விரட்டியுள்ளனர்.

இதனால், வேறு வழியின்றி வலியுடன் மருத்துவமனை வளாகத்திலேயே முதியவர் தங்கியுள்ளார். மறுநாள் நீண்ட நேரம் வரிசையில் நின்று ஓ.பி. சீட்டு வாங்க சென்றபோது, அங்கிருந்த ஊழியர்கள், ‘‘உன்னுடன் யார் வந்துள்ளார்கள்,’’ என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த முதியவர், ‘‘தன்னுடன் யாரும் வரவில்லை,’’ என்று கூறினார்.

அதற்கு, ‘‘யாராவது வந்தால் தான் உனக்கு ஓ.பி. சீட்டு தர முடியும். இல்லாவிட்டால் தரமுடியாது. வேண்டுமென்றால் நிலைய மருத்துவ அதிகாரியிடம் செல்லுங்கள்,’’ என கூறியுள்ளனர்.

அதன்படி, அங்கு பணியில் இருந்த ஆர்.எம்.ஓ. ராஜ்குமாரிடம் அந்த முதியவர் நேரில் சென்று, தனக்கு சிகிச்சை அளிக்க ஓ.பி. சீட் வழங்க அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவரும் ஈவு இரக்கமின்றி அந்த முதியவரை துரத்தியடித்துள்ளார்.

தனக்காக உறவினர்களும் வரவில்லை. மருத்துவர்களும் சிகிச்சை அளிக்காததால் மனமுடைந்த முதியவர், மருத்துவமனை வளாகத்திலேயே அனாதையாக தங்கியுள்ளார். இரவில் பனியின் கடுங்குளிரிலும், சாப்பிட வழியின்றி பசியுடனும் வலியுடன் துடித்துள்ளார். ஆனால், அவரை கடந்து சென்ற மருத்துவமனை ஊழியர்களோ, செவிலியரோ, டாக்டரோ யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், நேற்று காலை துப்புரவு ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்ய வந்தபோது, அந்த முதியவர் மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்தது தெரிந்தது.

இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருப்பதால் கீழ்ப்பாக்கம் அல்லது அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம், என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். டாக்டர்கள் சிகிச்சையளிக்க மறுத்து விரட்டியடித்ததால் முதியவர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் துடிதுடித்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘வலியுடன் சிகிச்சை பெற வந்த முதியவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து இருந்தால், பிழைத்து இருப்பார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் மனிதாபிமானின்றி அவரை விரட்டி அடித்ததால், பரிதாபமாக இறந்துள்ளார். இதற்கு, மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்களே காரணம். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’’ என்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் முதியவர் இறந்த தகவல் அறிந்தும் கூட அவரது சடலத்தை பிணவறைக்கு கொண்டு செல்ல மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்கள் முன்வரவில்லை. மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீசாரும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர், போலீஸ் கமிஷனருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவரது மேற்பார்வையில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிணவறையில் சேர்த்துள்ளனர்.