தருமபுரி

தருமபுரியில் அரசு பள்ளியில் திடீரென ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் மலர்விழி, "சத்துணவை சுகாதாரமான முறையிலும், சுவையாகவும் சமைத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டும்" என்று சத்துணவு ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வீராசனூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் சமையல் அறை கட்டிட திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது.

இந்த விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த விழா தொடங்குவதற்கு சற்று முன்னரே அங்கு வந்த ஆட்சியர் மலர்விழி ஊராட்சி தொடக்க பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள சமையல் கூடத்தையும், சத்துணவு தயாரிக்கும் பணியையும் பார்வையிட்டார்.

மாணவர்களுக்கு சமையல் செய்ய பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றின் இருப்பை சரிபார்த்த ஆட்சியர் அங்கு தயாரிக்கப்பட்ட சத்துணவின் தரம், முட்டையின் தரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, "சத்துணவை சுகாதாரமான முறையிலும், சுவையாகவும் சமைத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டும்.

சமையலறை மற்றும் சமையல் பாத்திரங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்" என்று சமையல் பணியாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அங்கு தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகள் குறித்த விவரங்களையும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

"கியாஸ் இணைப்புக்கான டெபாசிட் தொகையை செலுத்தி கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சத்துணவு தயாரிக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ரமணனுக்கு ஆட்சியர் உத்தரவும் பிறப்பித்தார்.