Nutrient organizers should cook healthy and clean nutrients for children

நாமக்கல்

சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் குழந்தைகளுக்குச் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சத்துணவைச் சமைத்து வழங்கிட வேண்டும் என்று ஆட்சியர் ஆசியா மரியம் அறிவுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், உணவுத் தயாரித்தல் மற்றும் கையாளுதல் குறித்துச் சத்துணவு அமைப்பாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடந்த இந்த முகாம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது.

இந்த முகாமிற்கு ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியது:

“நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வருகிற சத்துணவு அமைப்பாளர்கள் குழந்தைகளுக்குச் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சத்துணவைச் சமைத்து வழங்கிட வேண்டும்.

ஒவ்வொரு சத்துணவு அமைப்பாளர்களும் தாங்கள் சமையலுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களை தரமாக பார்த்து வாங்குவதோடு, அப்பொருளின் காலாவதி தேதியினையும் பார்த்து, அப்பொருளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

தாங்கள் சமையலுக்கு பயன்படுத்துகின்ற பாத்திரங்கள் உள்ளிட்டவைகளை சுத்தமாக கழுவி வைத்திருக்க வேண்டும்.

மேலும், சமையலுக்கு பயன்படுத்துகின்ற காய்கறிகள், கீரைகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சுத்தமாக கழுவி பயன்படுத்திட வேண்டும்.

குடிநீர் தொட்டியினை 15 நாள்களுக்கு ஒருமுறை கட்டாயம் சுத்தப்படுத்திட வேண்டும். கழிவுப்பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி, அதற்கான குப்பைத்தொட்டியில் முறையாக சேர்த்திட வேண்டும்.

சமையல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தன் சுத்தம் பேணுதல் மிக, மிக முக்கியம். சமையல் அறை, பொருட்கள் இருப்பு அறை உள்ளிட்ட அனைத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர்கள் சுத்தம் சுகாதாரத்தோடு, குழந்தைகளுக்கு சமையல் செய்து சத்துணவு வழங்கிட வேண்டும்” என்று அவர் பேசினார்.

இதில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் கவிக்குமார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மாரிமுத்துராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமசாமி, சிவநேசன், பாஸ்கர், சண்முகம், ராமசுப்பிரமணியம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம் மற்றும் கொல்லிமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.