Now the Government of the Nakshara Government has to complete the rule of 5 years Thirumavalavan ...

திருநெல்வேலி

குடியாட்சி முறைப்படி தேர்வு செய்யப்பட்ட இந்த அரசு 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தென்காசியில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.

அதில், “தமிழகத்தில் டாஸ்மாக் சாராயக் கடைகளை திறக்க கூடாது என மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை காவல்துறை நசுக்குகிறது.

போராடும் பெண்களை, காவல் துறையினர் தாக்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக் சாராயக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். அதன்படி 500 கடைகள் அடைக்கப்பட்டன.

நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால் அவற்றை வேறு இடங்களில் திறக்க அரசு முயற்சிப்பதால் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

போராட்டம் நடத்துபவர்களை காவல் துறையினர் கடுமையாக தாக்குகிறார்கள். இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த இருப்பதாகவும் பாடங்களில் மொத்த மதிப்பெண் கள் 200 என்பதை 100 ஆக மாற்ற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மாற்றங்களை செய்யும் அரசு, கல்விக்கூடங்களின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

பல்வேறு பள்ளிகளில் அடிப்படை தேவைகளான குடிநீர், விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடம், நூலகம் போன்ற வசதிகள் இல்லை. விடுதி வசதிகளும் இல்லை. கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது ஜனநாயக உரிமை. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயத்திற்கு உகந்தது அல்ல. ஆனால் கதவு திறந்திருக்கிறது என்று ரஜினிகாந்தை, பாரதீய ஜனதா கட்சி அழைப்பது பாச வலை அல்ல. அது சதி வலை. இதில் ரஜினிகாந்த் சிக்கி கொள்ளக் கூடாது. அவர் தனித்துவத்துடன் வகுப்புவாத, சாதிவாத அல்லாத அமைப்பை உருவாக்க வேண்டும்.

தமிழக அரசை சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு விட வேண்டும். அதிமுகவின் இரு அணிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது சரியானது அல்ல. தொடர்ந்து இந்த ஆட்சி நீடிக்க வேண்டும்.

ஜனநாயக முறைப்படி இந்த அரசு தேர்வு செய்யப்பட்டது. 5 வருடங்கள் முழுமையாக அந்த ஆட்சி நடைபெற அனுமதிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.