Now banana leaf is packed with packets of food - the Collectors action

செய்தித் தாள்கள், பிளாஸ்டிக் பேப்பரில் உணவுப் பொருள்களை பொட்டலம் கட்டத் தடை விதித்தும், இனி வாழை இலை, பாக்கு மட்டை, தேக்கு மட்டையில் பொட்டலம் கட்ட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தேநீர், பேக்கரி கடைகளில் உணவுப் பொருள்களை பொட்டலம் கட்ட செய்தித்தாள்களைப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு பொட்டலம் கட்டுவதால், செய்தித்தாள் மையில் உள்ள காரீயம், காட்மியம் உள்ளிட்ட ரசாயனப் பொருள்கள் உணவுப் பொருளில் கலந்து புற்றுநோய், கல்லீரல், மூளை நரம்பு பாதிப்புகள், செரிமானக் குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, செய்தித்தாள்களில் உணவுப் பொருள்களைப் பொட்டலம் கட்டுவதற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது.

செய்தித்தாள், பிளாஸ்டிக் தாள்களைத் தவிர்த்து, வாழை இலை, பாக்கு மட்டை, தேக்கு இலைகளில் பொட்டலம் கட்டலாம். தேநீர், பால், சாம்பார், ரசம் உள்ளிட்ட உணவுகளை பிளாஸ்டிக் கவர்களில் வழங்கக் கூடாது.

தடையை மீறி செய்தித்தாள், பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருள்களை பொட்டலம் கட்டி வழங்கப்படுவது கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், உணவக உரிமையாளர்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற w‌w‌w.‌f‌s‌s​a‌i.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளம் வாயிலாகவும், இ-சேவை மையம் மூலமும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

உணவுப் பொருள்கள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் தெரிவிக்கலாம்” என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.