11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முறையில் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை வரும் கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசு கடந்த மே மாதம் 22 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வாக நடத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டது.

3 பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும்போது, அது அவர்களை மனதளவில் சோர்வடைய செய்யும் என்றும், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும், கேகே. ரமேஷ் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

கடந்த மாதம், இது தொடர்பான விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர், உயர்கல்வி பயிலும் மாணவர்கள் முதலாம் ஆண்டில் சிரமப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, நிபுணர் குழு அமைக்கப்பட்டு அந்த குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பிறகு, இந்த வழக்கு விசாரணை இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர். ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.