டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை, தற்போதைய நிலையிலும் பெய்து வருகிறது. இதனால் சாலையில் மழைநீர் ஆறாக ஓடுகிறது. ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன.

 

வடகிழக்கு பருவமழையை டெல்டா மாவட்டங்கள் நல்ல பொழிவை பெற்று வருகின்றன. நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, வல்லம், சூரக்கோட்டை, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் நனைந்தபடி சென்றனர். சாலையில் மழைநீர் ஆறாகபெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். 

கும்பகோணம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, அணைக்கரை, பந்தநல்லூர்,  திருப்பனந்தாள், ஆடுதுறை உள்ளிட்ட  பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது.  பம்பு செட்டுகளை கொண்டு தண்ணீர் பாய்ச்சி, சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் தற்பொழுது பொழிந்து வரும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில், மழை நீர் வடிகால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவுமுதல் பலத்த மழைபெய்கிறது. திருவாரூர், நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மிதமான மழை பெய்துவருகிறது. காலை நேரத்தில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நனைந்தபடியே சென்றனர். திருவாரூர், நன்னிலம்,குடவாசல், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.