north indian gang target women alone in house stealing alert

தேனி

தேனியில், பாலீஸ் போடுவதாக கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்த 10 சவரன் நகையை திருடிசென்ற பீகார் மாநில இளைஞர்களை மக்கள் மடக்கிப் பிடித்து காவலாளர்களிடம் ஒப்படைத்தனர். 

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ளது குப்பிநாயக்கன்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். அவருடைய மனைவி பிரீத்தி. 

இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அவரிடம், வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கநகைகளை பாலீஸ் போட்டு தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய பிரீத்தியும், வீட்டில் வைத்திருந்த 25 சவரன் நகைகளை எடுத்துக் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் பாலீஸ் செய்து கொடுத்துவிட்டு, தங்க நகைகளை சிறிது நேரம் வெயிலில் காய வைத்து எடுக்குமாறு கூறிவிட்டு அதற்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து காய வைத்த நகைகளை பார்த்தபோது, தங்க சங்கிலி ஒன்று நிறம் மாறி இருப்பதைக் கண்டு பிரீத்தி அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அதனை சோதனை செய்தபோது, அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. 

பிறகுதான் அவர்கள் இருவரும் பாலீஸ் போடுவது போல் நடித்து 10 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்றுவிட்டனர் என்பது தெரியவந்தது. 

கவரிங் நகையை கையில் வைத்துக்கொண்டு பீரித்தி அவர்களை தெருக்களில் தேடினார். அப்போது பக்கத்து தெருவில் பாலீஸ் போடுவதாக கூறி இருவரும் கூவிக் கொண்டிருந்தனர். 

இதனையடுத்து பிரீத்தி பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் மடக்கி பிடித்து கண்டமனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

காவலாளர்கள் நடத்திய விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் ஷா (32), முல்முல்குமார் (22) என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலாளர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் நகையையும் மீட்டனர்.

வடமாநில இளைஞர்கள் இதுபோன்ற நூதன முறையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதால் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வடமாநிலத்தவர் என்றாலே உஷாரும், அச்சத்துடனும் இருக்கின்றனர்.