மானநஷ்ட வழக்கா ? என் மீதா ? சிரிக்கிறார் டிஐஜி ரூபா !!

தான் தனது கடமையை மிகச் சரியாக செய்து வருவதாகவும், தன் மீது மான நஷ்ட வழக்கு தொடர முடியாது என்றும் கர்நாடக மாநில முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.ரூபாவின் குற்றச்சாட்டை சத்தியநாராயணராவ் முழுவதுமாக மறுத்தார். இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட 5 அறைகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. அந்த குழுவினர் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு நடத்தியது. இந்த விசாரணையின் முதல் கட்ட அறிக்கை  இன்று மாநில அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலா லஞ்சம் பெற்றுக் கொண்டு  சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்ட பிரச்சனையை வெளிக் கொண்டுவந்த டிஐஜி ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக புகழேந்தி கூறியிருந்தார்

இந்த நிலையில் பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார்.

தான் தனிப்பட்ட முறையில் சசிகலாவை இலக்காக கொண்டு செயல்பட்டு இந்த முறைகேடுகளை வெளியே கொண்டு வரவில்லை என்றும் . பரப்பனஅக்ரஹாரா சிறையில் சட்டவிரோதமான செயல்கள் நடப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததை அடுத்துதான் சிறைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதாக கூறினார்.

இந்த விவகாரத்தில் தன்  மீது மானநஷ்ட வழக்கு போட முடியாது என்றும் தனது  கடமையை முறையாக செய்துள்ளதாகவும் ரூபா தெரிவித்தார்.