நீட் தேர்வு நடத்தப்படுவதால், சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டும் பயன் பெறுவார்கள். கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க முடியாது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் ஒத்தி வைக்க பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில், மத்திய அமைச்சர்களை சந்தித்து, நீட் தேர்வு விலக்கு குறித்து பேசிவந்தனர்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதைதொடர்ந்து இன்று டெல்லி சென்றுள்ள சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அவசர சட்டத்துக்கான மசோதாவை ஒப்படைத்து பேசி வருகிறார்.

தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள சிபிஎஸ்இ மாணவர்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். இதையொட்டி வழக்கறிஞர்களிடம் ஆலோசனைகளை கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வு நடத்த வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர்க்க வேண்டும். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்கக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சிபிஎஸ்இ மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில்உள்ள மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள அவர்கள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.