விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கு இடைக்காலத் தடை விதித்து செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சித்திரை, மாசி மாதங்களைத் தவிர மாதந்தோறும் வெகு சிறப்பாக அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடத்துவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான அடியார்கள் கலந்து கொள்வர்.

இந்த நிலையில் மேல்மலையனூரைச் சேர்ந்த ஞானவேல், அசோக் ஆகியோர் செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர்.

அந்த மனுவில் “கோவிலுக்கு வரும் அடியார்களுக்கு கழிப்பறை, குடிநீர், தங்கும் வசதி, பேருந்து போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்யவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால் கோவிலில் திருவிழா மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடத்த தடை விதிக்க வேண்டும்” என்றுத் தெரிவித்திருந்தனர்.

எதிர் தரப்பினராக, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோரை குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை, நீதிபதி வெங்கடேசன் விசாரித்தார்.

இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், “மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லாமல் திருவிழா மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடப்பதாக ஆவணங்களுடன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கோவிலுக்கு வரும் அடியார்களுக்கு ஆலய நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. அடியார்கள் அதிகமாக கூடும் கோவில்களில் அடியாகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், எதையும் இந்த கோவில் நிர்வாகம் செயல்படுத்தவில்லை. இதனால், அடியார்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பது தெளிவாக தெரிய வருகிறது.

எனவே, வரும் அமாவாசை அன்று நடக்கும் ஊஞ்சல் உற்சவத்துக்கு இடைக்கால தடையும், இந்த இடைக்கால தடை உத்தரவு அடுத்த மாதம் 7-ந் தேதி வரை பிறப்பிக்கப்படுகிறது” என்றும் கூறியுள்ளார்.

நாளை (வெள்ளிக்கிழமை) தை அமாவாசை என்பதால் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறவுள்ள நிலையில் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், நாளை இரவு, தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கோவிலுக்கு வருகை தரும் அடியார்களும் சரி, இந்த விழாவை கொண்டாடும் கோவில் நிர்வாகமும் சரி மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

நாளைய விழாவுக்கு இன்றே தங்களது ஊரில் இருந்து கிளம்பி இருக்கும் அடியாரகள் இந்த உத்தரவைப் பற்றித் தெரியாமல் இங்கு வந்து ஏமாற்றம் அடையும் சூழ்நிலையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.