ஹனிமூன் சென்றபோது, தனது கணவனை விட்டுவிட்டு பழைய காதலனுடன் பெண் ஒருவர் சென்ற சம்பவம், அவர்களது குடும்பத்தாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

 

திருமணத்துக்குப் பிறகு, இரு வீட்டாரும் சேர்ந்து ஹனிமூனுக்காக கொடைக்கானல் அனுப்பி வைத்தார்கள். கொடைக்கானல் வந்த அவர்கள், அண்ணாசாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் 2 நாட்களுக்கு முன்பு ரூம் எடுத்து தங்கினார்கள்.இரண்டு நாட்களாக கொடைக்கானலை ஜாலியாக சுற்றிப்பார்த்துள்ளனர். ஊர் சுற்றி பார்த்து விட்டு, இரவில் இருவரும் அசந்து தூங்கினர். ஆனால், காலையில் எழுந்து பார்த்தபோது, மனைவியை காணாது ராஜேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஓட்டல் முழுவதும் மனைவியை தேடினார். அனைவரிடமும் விசாரித்துள்ளார். ஆனாலும் மனைவி குறித்து எந்த தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை. 

மனைவி காணாதது குறித்து, மாமியார் வீட்டுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். அவர்களும் பயந்துபோய் சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகிளில் தேட ஆரம்பித்தனர். அவர்கள் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்க, ராஜேஷ், கொடைக்கானல் முழுவதும் தேடி வந்தார். பின்னர், போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளிவர ஆரம்பித்தது. புது மணப்பெண், ரமேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவரவே, அவசர அவசரமாக ராஜேஷ் உடன் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

 

திருமணத்துக்குப் பிறகும், புது மணப்பெண் ரமேஷூடன் போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். கொடைக்கானலுக்கு இவர்கள் வந்த நிலையில், ரமேஷம் கொடைக்கானல் வந்துள்ளார். ராஜேஷ் தங்கியுள்ள ஓட்டலுக்கு வந்த ரமேஷ், அங்கிருந்து புதுப்பெண்ணை அழைத்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார். இந்த தகவல் அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாயமான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.