தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தககண்காட்சி மற்றும் பொருட்கண்காட்சி ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா ஊரடங்கு தொடர்ந்து கிட்டதட்ட 18 மாதங்களாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில்,நவம்பர் மாதம் முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் புதிதாக உருமாறியுள்ள ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒமைக்ரான் மற்றும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் வகையில் கொரோனா பரவல் தடுப்பு கட்டுபாடுகளை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது . இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

ஆலோசனை கூட்ட முடிவில் தமிழகத்தின் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு jஜனவரி 10 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டுள்ளது. 9 முதல் 12 வரையிலான பள்ளிகள்,தொழில் பயிற்சி நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தக கண்காட்சிகள் ஒத்திவைக்கபட்டுள்ளன.