பயிர்கள் வாடுவதால், தொடர்ந்து விவசாயிகள் இறக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதையொட்டி புதிய பயிர்க்காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பல மாவட்டங்களில் நெல், கரும்பு, மக்காச்சோளம் என பல்வேறு பயிர்கள் தண்ணீரின்றி கருகுகின்றன. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஏராளமான விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கண் முன்னே கருகி போவதை கண்டு செய்வதறியாது தவிக்கின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளின் குறைகளை போக்குவதற்கு, புதிய பயிர்காப்பீடு திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்த பின் அறிக்கையை முதல்வரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.