கோவாவில் நடைபெற்ற நீச்சல், மாரத்தான், சைக்கிளிங் ஆகிய போட்டிகளை உள்ளடக்கிய தொடரில் பங்கேற்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையை பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பாராட்டி உள்ளார்.
நீச்சல், மாரத்தான் மற்றும் சைக்கிள் ஆகிய பந்தயங்களை உள்ளடக்கிய கடினமான சர்வதேச விளையாட்டு நிகழ்வாகிய "Ironman 70.3 Goa - 2025" விளையாட்டு போட்டியில் பங்கேற்று அனைத்து பந்தயங்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்த பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணமலை, எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக தமிழில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் #FitIndia இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
மேலும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நீச்சல், மாரத்தான் மற்றும் சைக்கிள் ஆகிய பந்தயங்களை உள்ளடக்கிய கடினமான சர்வதேச விளையாட்டு நிகழ்வாகிய "Ironman 70.3 Goa - 2025" விளையாட்டு போட்டியில் பங்கேற்று நம்மை பெருமைபடுத்தியதோடு, அனைத்து பந்தயங்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள எனதன்பு சகோதரர்கள் திரு. அண்ணாமலை அவர்கள் மற்றும் திரு. தேஜஸ்வி சூர்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
வளர்ந்து வரும் அறிவியல் உலகில் இளைஞர்களுக்கு விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டும் விதமாக, பொது வாழ்க்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது மிகுந்த அவசியமானது மட்டுமன்றி ஆரோக்கியமானதும் கூட. அந்த வகையில் பாஜகவின் தலைவர்கள் அனைவரும் நமது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணங்களாக விளங்குகின்றனர் என்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
