முரசொலி பவளவிழா திமுக சார்பில் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில், பிரமாண்ட மேடை அமைத்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்த விழாவில், விஐபிக்கள், விவிஐபிக்கள் அமர்வதற்கும், மாவட்ட செயலாளார்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக பவளவிழா அழைப்பிதழை நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சியினருக்கும் கொடுத்து, வரேவேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திரமோடி உள்படபலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள், சட்டமன்ற வைரவிழா, முரசொலி பவளவிழா என திமுக சார்பில் அமர்க்களமாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முரசொலி 75ஆம் ஆண்டு பவளவிழா பணிகளை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்எல்ஏ, பார்வையிட்டார். அப்போது, பணிகளை விரைந்தும், செம்மையாகவும் செய்யும்படி கேட்டுகொண்டார்.