Municipal commissioner slaughtering contractors in the room
தாம்பரம் நகராட்சி கமிஷனர் முன்னிலையில், ஒப்பந்ததாரர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம் நகராட்சியில், மொத்தம், 39 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் இழுபறியால், நகராட்சி கமிஷனர் மதிவாணன் தனி அதிகாரியாக நிர்வாகத்தை நடத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, நகரில் குப்பை அகற்றுவது, குடிநீர் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதி தொடர்பான பணிகள் சரிவர நடைபெறவில்லை என பாஜகவி, கமிஷனர் மதிவாணனை சந்தித்து புகார் செய்தனர்.

நகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்யாததால், இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. கமிஷனர் மதிவாணன் மற்றும் ஒப்பந்ததாரர்களிடையே இணக்கம் இருப்பதால், எந்த பிரச்சனையையும் அவர் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று மாலை, தாம்பரம் நகரின் மின்விளக்குகள் பராமரிப்பு செய்வது தொடர்பாக, கமிஷனர் மதிவாணன் முன்னிலையில், அவரது அறையில் வெளியூர் மற்றும் உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் இடையே ஆலோசனை கூட்டம் நடந்தது. சுமுகமாக நடந்த ஆலோசனை கூட்டம் இறுதியில் சட்டை கிழிப்பு, கைகலப்பு என பெரும் தகராறில் முடிந்தது.

வெளியூர் ஒப்பந்ததாரர்கள், உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு கமிஷனர் மதிவாணன் துணையாக இருப்பதால், வெளியூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
நேற்று நடந்த கூட்டத்தின் போது, வெளியூர் ஒப்பந்ததாரர்கள், கமிஷனர் மதிவாணன் செல்போனில் பேசிய பேச்சை பதிவு செய்தனர். இதற்கு, உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் சங்கர், சரவணன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, வெளியூர் ஒப்பந்ததாரர்களை, உள்ளூர் ஒப்பந்ததாரர்களும் அவர்களது ஆதரவாளர்களும் சரமாரியாக தாக்கினர். கமிஷனர் அலுவலகத்திலேயே நடந்த அடிதடி, ரோடு வரை சென்றது. வெளியூர் ஒப்பந்ததாரர்களை விரட்டி விரட்டி நகராட்சி அலுவலகத்தின் நுழைவாயில் வரை அடித்தனர்.
மேலும், அவர்களை தாக்கியதை, உள்ளூர் ஒப்பந்ததாரர்கள், தங்களது செல்போனில், அடிவாங்கியவர்கள் சட்டை கிழிந்து அலங்கோலமாக இருப்பதை படம் எடுத்து, கடுமையான மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில், நகராட்சிக்கு வரி செலுத்துவதற்கும்,, சான்றிதழ்கள் பெறுவது உள்பட பல்வேறு பணிகளுக்கு வந்த பொதுமக்கள், முகம் சுளித்து வெளியேறினர்.
ஏற்கனவே ஒப்பந்ததாரர்களின் பிடியில் தாம்பரம் நகராட்சி நிர்வாகம் இருந்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், நகராட்சி நுழைவுவாயில் வரை கைகலப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
