சத்தியமங்கலம்,
சத்தியமங்கலத்தில் காவல் நிலைய வாசலின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள அமராவதிபுதூரை சேர்ந்த கட்டிட பொறியாளர் அண்ணாதுரை (50).
இவர் தனது வேலை குறித்து சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலம் அருகே உள்ள விடுதியில் நேற்று தங்கியிருந்தார். தன்னுடைய மோட்டார் சைக்கிளை புதிய காவல் நிலையம் வாசலின் முன்பு நிறுத்தி வைத்து இருந்தார்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. புகைமூட்டத்தைக் கண்டு அலறி அடித்து வந்த அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமாயிற்று.
வாகனம் தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. மோட்டார் சைக்கிள் தானாக தீப்பிடித்து எரிந்ததா? அல்லது விஷமிகள் யாராவது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனரா? என்று சத்தியமங்கலம் காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
