Mother younger sister murder at chennai
சென்னை சைதாப்பேட்டையில் மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் சண்முகம். இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு பாலமுருகன் என்ற மகனும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். பாலமுருகன் தரமணியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சண்முகம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால், மனமுடைந்த பாலமுருகன் மன உளைச்சல் அடைந்தார். இதையொட்டி 2 முறை தற்கொலைக்கு முயன்றார். அவரை, மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
ஆனாலும் அவர், மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதையடுத்து பாலமுருகன், புறநகர் பகுதியான கோவளத்தில் தனியாக வசித்தார். ஹேமலாவும், ஜெயலட்சுமியும் சைதாப்பேட்டையில் வசித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஹேமலதாவை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். பின்னர் தாய் மற்றும் மகளை இரவு வரை பார்க்கவில்லை. அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த, அக்கம்பக்கத்தினர், அவர்களது வீட்டுக்கு சென்றபோது, கதவு திறந்து இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, தாய் ஹேமலதா, மகள் ஜெயலட்சுமி ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையில், கோவளத்தில் உள்ள பாலமுருகனுக்கு தகவல் கொடுக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து, அவரை தேடி கோவளம் சென்றபோது, அங்கு அவர் தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரை மீட்ட போலீசார், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தாய் ஹேமலதா, தங்கை ஜெயலட்சுமி ஆகியோரை கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்பு கொண்டார். ஆனால், அவர் எதற்காக கொலை செய்தார் என்ற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
