திருவள்ளூர்

திருவள்ளூரில் குடிநீர் கேட்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அண்ணா தெரு, வள்ளலார் தெரு, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. மின் மோட்டார் பழுதடைந்ததே இதற்கு காரணம் என்று மக்கள் தெரிவித்தனர்.

மேலும், இதுகுறித்து பலமுறை ஒன்றிய நிர்வாகத்தினரிடம் கிராம மக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீருக்காக பெண்கள் பல கி.மீ. தொலைவுக்குச் சென்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாததால், சினம் கொண்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை வெற்றுக் குடங்களுடன் பெரியபாளையம்- ஆவடி நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், பெரியபாளையம் - ஆவடி நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வெங்கல் காவலாளர்கள்சம்பவ இடத்துக்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்” என காவலாளர்கள் உறுதியளித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட மறியலை கைவிட்டு, பெண்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.