சிவகங்கை

சிவகங்கையில், பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூசலாகுடி தொடக்க வேளாண்மை வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகாவிற்கு உட்பட்டது உஞ்சனை. இதில் உஞ்சனை, சின்ன உஞ்சனை உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 2016-17-ஆம் ஆண்டில் பயிர் காப்பீட்டுத் தொகையை பூசலாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செலுத்தி உள்ளனர்.

கடந்தாண்டு பருவமழை பொய்த்துப் போனதால் தண்ணீரின்றி உஞ்சனை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர் சாகுபடி செய்யப்படவில்லை. இதனால் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று உஞ்சனை பகுதியைச் சேர்ந்த 283 விவசாயிகள் காத்திருந்தனர்.

ஆனால், கணக்கெடுத்து ஆறு மாதங்கள் ஆகியும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. மேலும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாக காப்பீட்டு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில், உஞ்சனை குரூப்பில் ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் செய்த இரண்டு விவசாயிகளை வைத்து, மற்ற 281 விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க மறுக்கின்றனர்.

இந்த நிலையில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து உஞ்சனை பகுதியைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூசலாகுடி தொடக்க வேளாண்மை வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் கூறியது: “உஞ்சனை பகுதியில் இரண்டு விவசாயிகள் ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் செய்ததை வைத்து, தண்ணீரின் விளைச்சல் காணாத மற்ற விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க காப்பீட்டு நிறுவனம் மறுக்கிறது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தால்தான் இப்பகுதியில் விளைச்சல் இல்லை என்பது தெரியவரும். எனவே, அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தி வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காவிட்டால் விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்று கூறினர்.