இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியில் ஆளும் மோடி அரசு கறுப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் அழிப்பதாக சொல்லிக் கொண்டு ஏழை-எளிய மக்களின் வயிற்றில்அடிக்கும் பொருளாதார அவசர நிலையை இன்று நாட்டில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மோடியின் இந்த நட வடிக்கை துக்ளக்தர்பாரை விட மோசமானது என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சிக்கிறார்கள். இதனால் நாட்டில் பெரும் கலவரம் ஏற்படலாம் என உச்சநீதிமன்றமே அச்சம் தெரிவித்திருக்கிறது.
இதனால் இந்தியாவின் இறையான்மையே நெருக்கடிக்கு ஆளாகும். இத்தகைய நெருக்கடிக்கு நாட்டை ஆளாக்கியிருக்கும் மோடி அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் நாளை ‘அரசியலமைப்புச் சட்ட நாள்’ ஆக கடைபிடிப்போம் என மோடி அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. ஒருபுறம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவையே சிதைக்கும் விதமாக பொருளாதார அவசர நிலையை நடை முறைப்படுத்திக் கொண்டு இன்னொருபுறம் அரசியலமைப்புச் சட்ட நாளை’ கொண்டாடுவது அம்பேத்காருக்கு செய்யும் மிகப் பெரும் துரோகமாகும்.
எனவே அரசியலமைப்புச் சட்டநாளை கொண்டாடும் தகுதி மோடி அரசுக்கு இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். இது அம்பேத்கரின் 60-வது நினைவு ஆண்டு.
தற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்டும் விதமாக அவரது நினைவு நாளான டிசம்பர் 6-ம் நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு’ புதுச்சேரியில் நடைபெற உள்ளது. அதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என தொல்,திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
