Asianet News TamilAsianet News Tamil

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்: ஜன.23இல் முதல்வர் ஸ்டாலின் திறப்பு!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் வருகிற 23ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்

MK stalin to inaugurate Madurai Alanganallur Mega Jallikattu stadium on january 23 smp
Author
First Published Jan 8, 2024, 12:46 PM IST | Last Updated Jan 8, 2024, 12:46 PM IST

தை திருநாள் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் முதன்முதலாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகபிரசித்தி பெற்றது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் ஊருக்குள்ளேயே நடைபெற்று வந்தன. வாடிவாசல் அருகேயுள்ள பிரதான காலரியையும் பெரும்பாலும் விஐபிக்கள் ஆக்கிரமித்து விடுவதால், ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பொதுமக்கள், வெளிநாட்டினருக்கு இடம் கிடைப்பதில்லை.

இப்பிரச்சினைகளை களையும் பொருட்டு, ஜல்லிக்கட்டை அனைத்து தரப்பினரும் கண்டுகளிக்க ஏதுவாக, அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக் கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி ரூ.44 கோடி மதிப்பில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உலகத் தரத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத் தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த மைதானத்துக்கு பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும், வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் காத்திருப்பு அறை, கால்நடை மருத்துவமனை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை என அனைத்து நவீன வசதிகளுடன்  அமையவுள்ள இம்மைதானத்தின் கட்டுமானப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் வருகிற 23ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். முன்னதாக, நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு அலங்காநல்லூர் புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒன்றிரண்டு பணிகள் காரணமாக அதற்குள் திறக்கவியலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜனவரி 23ஆம் தேதியன்று புதிய ஜல்லிக்கட்டு மைதானம் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இங்கு போட்டிகள் நடைபெறும் என தெரிகிறது.

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசு உத்தரவு ரத்து - உச்ச நீதிமன்றம் அதிரடி!

இதனிடையே, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, மதுரை அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும், பாலமேட்டில் 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்த கால் இன்று நடப்பட்டது. அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது. அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios