கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 14 ஆயிரம் கன அடியில் இருந்து 22 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் அணையின்  நீர் மட்டம் உயர்ந்து வருவதால்டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும்  மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

தொடர் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 14,751 கனஅடியில் இருந்து 22,077 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6000 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 2000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது

இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 71.18 அடியாக உள்ளது. அணையின் நீர்இருப்பு 33.72 டிஎம்சி.,யாகவும், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 700 கனஅடியாகவும் உள்ளது.

தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் ஒகேனேக்கலில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

.இதே போன்று பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 65.33 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்இருப்பு 9.1 டிஎம்சி.,யாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3656 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. இதே போன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியை எட்டி உள்ளது.