மசூர் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மசூர் பருப்பின் தரத்தை உறுதி செய்த பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சிவங்கையைச் சேர்ந்த ஆதி ஜெகநாதன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

மத்திய உணவு திட்டத்தில், மசூர் பருப்பை பயன்படுத்தனில், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என்று ஆதி ஜெகநாதன் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சில மாதங்களுக்கு முன்பு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள், உணவு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

மேலும், மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், மசூர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, மசூர் பருப்பு தடை செய்யப்பட்ட பொருள் இல்லை என்றும், பல கட்ட தரப்பரிசோதனைகளுக்குப் பிறகே மசூர் பருப்பு கொள்முதல் செய்யப்படுவதாகம் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மசூர் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நீக்கி உத்தரவிட்டனர். மசூர் பருப்பில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கக்கூடாது என்றும் கலப்படம் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மசூர் பருப்பின் தரத்தை உறுதி செய்த பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.