Asianet News TamilAsianet News Tamil

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இரயில் மறியல்; போலீஸுடன் தள்ளி முள்ளு; 26 பேர் கைது...

marxist Communist Party held in train block protest 26 people arrested
marxist Communist Party held in train block protest 26 people arrested
Author
First Published May 5, 2018, 8:04 AM IST


திருச்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் இரயில் மறியல் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 26 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், 

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கால அவகாசம் கேட்டிருப்பதை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, திருச்சி சந்திப்பு இரயில் நிலையம் முன்பு பலத்த காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காவல் உதவி ஆணையர்கள் பாலமுருகன் (சட்டம் - ஒழுங்கு) தலைமையில் உதவி ஆணையர் அருள்அமரன் (மாநகர குற்றப்பிரிவு), கண்டோன்மெண்ட் ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.

இரயில் நிலைய நுழைவுவாயில் முன்பு காவலாளர்கள் இரும்பு தடுப்புகள் அமைத்திருந்தனர். மேலும், போராட்டக்காரர்கள் இரயில் நிலையத்திற்குள் நுழைந்துவிடாமல் இருப்பதற்காக நுழைவுவாயிலிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு ரௌண்டானாவில் இருந்து ஊர்வலமாக இரயில் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது நுழைவுவாயில் முன்பு போராட்டக்காரர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். அப்போது சிலர் இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதில் காவலாளர்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

அப்போது கட்சியின் செயற்குழு உறுப்பினர் லெனின் சட்டை கிழிந்தது. காவலாளர்களுடன் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், காவலாளர்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தண்ணீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்த கூட அனுமதிக்க மாட்டீர்களா? என காவலாளர்களை பார்த்து அவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து இரயில் நிலைய நுழைவுவாயில் வளாகப்பகுதி வரை சென்று போராட்டம் நடத்த காவலாளர்கள் அனுமதி வழங்கினர். அதன்பின் நுழைவுவாயில் வளாகப்பகுதியில் தரையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை காவலாளர்கள் கைது செய்தனர். இதில் எட்டு பெண்கள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios