சென்னை மெரினா கடற்கரை பகுதி மற்றும் ராஜரத்தினம் ஸ்டேடியம் ஆகிய இரண்டு பகுதிகளும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 1200 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் 11வது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி காலை 1.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக, ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவை சீரடைந்தது. சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்தது. எனினும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருந்தார் கருணாநிதி.

இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது எனவும் மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார் எனவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும் எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் தொண்டர்கள் பதற்றமடைந்தனர். ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் நேற்றிரவு குவிந்தனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் காவேரி மருத்துவமனையில் காத்துக்கிடக்கும் தொண்டர்கள், அடுத்த மருத்துவ அறிக்கை எப்போது வரும் என்று எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று திமுக நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை சென்னை வருமாறு அழைப்பு விடுத்திருப்பதால், அவர்களும் சென்னைக்கு விரைந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவையனைத்தும் தொண்டர்களை பதற்றமடைய வைத்துள்ளது. 

நேற்றிரவு முதலே ராஜாஜி ஹால் போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம், மெரினா கடற்கரை ஆகியவையும் போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 1200 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயுதப்படை காவலர்கள் 500 பேரும், தமிழக சிறப்பு காவல்படை வீரர்கள் 700 பேரும்  உள்ளனர். சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களில் இருந்து தலா 5 காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மெரினா கடற்கரை பகுதியிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்தாலோ அல்லது கூடுதல் காவலர்கள் தேவைப்படும் நேரத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.