malik feroz khan appointed as new election commissioner of TN
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளராக மாலிக் பெரோஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று காலை 11 மணியளவில் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்துக்குள் நடத்த வேண்டுமென்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக காலியாக இருந்த மாநிலத் தேர்தல் ஆணையாளர் பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாலிக் பெரோஸ் கானை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் முழு பொறுப்பும் மாநில தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

மே மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, மாநிலத் தேர்தல் ஆணையாளராக இருந்த பி.சீதாராமன் கடந்த மார்ச் 22-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனால் மாநிலத் தேர்தல் ஆணையாளர் பதவி காலியாக இருந்தது.
இந்தப் பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கும் பணியில் தமிழக அரசு கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாலிக் பெரோஸ் கானை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மாலிக் பெரோஸ் கான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்தவர். அரசுத் துறைகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்த அவர், ஓய்வு பெறுவதற்கு முன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையாளராக இருந்தார்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அது தொடர்பான பணிகளில் சிறப்பான அனுபவம் பெற்றவர் என்பதால் மாலிக் பெரோஸ் கான் மாநிலத் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாலிக் பெரோஸ் கான் இன்று காலை 11 மணியளவில் மாநிலத் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
