சென்னை தாம்பரம் அருகே சாலையோரம் வீசப்பட்ட பக்கியம் ஆண் குழந்தையை மீட்ட போலீசார் எக்மோர் குழந்தைகள்  நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சென்னையை அடுத்த  தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலம் அருகே மதுரவாயல் செல்லும் பைபாஸ் சாலையில்  நேற்று திடீரென குழந்தை அழும் குரல் கேட்டது. இதையடுத்து
அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்தபோது துணியால் சுற்றிய நிலையில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

குப்பை தொட்டிக்கு  அருகில் வீசப்பட்ட நிலையில் கிடந்த பச்சிளங்குழந்தை குறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், பொது மக்களும் 108 ஆம்பிலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அந்த குழந்தைக்கு முதலுதவி அளித்து உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது குழந்தைக்கு தேவையான பால் அதன் உடல் நலத்திற்கு தேவையான மருத்துவ உதவிகளை டாக்டர்கள் வழங்கி வருகிறார்கள்.

சாலையில் வீசப்பட்ட அந்த குழந்தை யாருடையது? பெற்றெடுத்த தாய் குழந்தையை வீதியில் வீசிச் செல்வதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.