முதலமைச்சர் ஜெயலலிதா, விரைவில் பூரண குணமடைந்து, தமிழக மக்களுக்கு திறமையாக தொடர்ந்து சேவை செய்வார் என மலோசிய உயர்க்கல்வித்துறை துணை அமைச்சர் கமலநாதன் கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் இடைவிடாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களில் யாகம், பூஜை, தேர் இழுத்தல், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர், பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்களும், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்குறித்து விசாரித்து செல்கின்றனர்.

இந்நிலையில், மலேசிய உயர் கல்வித்துறை துணை மந்திரி கமலநாதன், நடிகை விஜயசாந்தி, நக்மா, தேசிய தொண்டர் காங்கிரஸ் கட்சி தலைவர் போடி சதாசிவம் உள்பட பலர் நேற்று, அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

அப்போது, மலேசியா உயர் கல்வித்துறை துணை அமைச்சர் கமலநாதன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து டாக்டர் பாபு எனக்கு விரிவாக தெரிவித்தார். ஜெயலலிதாவின் உடல்நலம் சிறப்பாக இருக்கிறது. கூடிய விரைவில் அவர் வீடு திரும்பி சேவையை தொடங்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவர் கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா கூடிய விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். நான் மட்டுமல்லாது மலேசியாவில் அதிகமாக வாழும் தமிழர்கள், நண்பர்கள் ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள். கூடிய விரைவில் அவர் குணமடைந்து தமிழக மக்களுக்கு திறமையாக தொடர்ந்து சேவை செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

மலேசியாவில் இந்த ஆண்டு தமிழ் கல்வி தொடங்கி 200வது ஆண்டு கொண்டாடுகிறோம். அக்டோபர் 21ம் தேதி 1816ம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் ஒரே ஒரு தமிழ் வகுப்பு ஆரம்பித்த சூழ்நிலையில் இன்று 2016ம் ஆண்டு 200 ஆண்டு காலமாக தமிழ் கல்வி சிறப்பாக மலேசியாவில் செயல்படுகிறது.

தமிழ் கல்வி ஆரம்பமே தமிழ்நாட்டில் தான். ஆசிரியர்கள், பாடத்திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து எடுத்து சென்று மலேசியாவில் தமிழ் கல்வி தொடங்கப்பட்டது. ஆனால் இன்று மலேசியாவில் மலேசிய தமிழ் ஆசிரியர்களே சொந்தமாக பாடத்திட்டத்தை தயார்படுத்தி ஏறத்தாழ 524 தமிழ் பள்ளிகள், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்கள் என இந்த காலகட்டத்தில் மலேசியாவில் படிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.