Making a Mother Language Education in Kindergarten - Request to Tamil Nadu Government

பெரம்பலூர்

தமிழக அரசு தாய்மொழி வழிக் கல்வி மழலையர் பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாடு பெரம்பலூரில் நேற்று நடைப்பெற்றது.

இந்த மாநாட்டுக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் அகவி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தேவன்பு, திரவியராசு, சி. கருணாகரன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ம. செல்வபாண்டியன், இரா.எட்வின் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாநில துணைப் பொதுச் செயலர் களப்பிரன், மாநில செயற்குழு உறுப்பினர் தி.த ங்கவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாவட்ட செயலர் ப. செல்வகுமார் வேலை அறிக்கை சமர்பித்தார். தொடர்ந்து, சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம் எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. பின்னர், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாநாட்டில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிப்பது, 

மாநில அரசு தாய்மொழி வழிக் கல்வி மழலையர் பள்ளிகளை உருவாக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகம் திறந்தவெளி அரங்கத்துடன் கூடிய கலையரங்கம் உருவாக்க வேண்டும். 

வரலாற்று சிறப்பு மிக்க ரஞ்சன்குடி கோட்டையை புனரமைத்து, சுற்றுலா மையமாக பராமரிக்க வேண்டும். 

ஆட்சியரக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவை இரவு 10 மணி வரை திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாநாட்டில் மாவட்ட துணைத் தலைவர் ஆ. ராமர் வரவேற்றார். மாநாட்டின் முடிவில் மாவட்ட பொருளாளர் க. மூர்த்தி நன்றித் தெரிவித்தார்.