மதுரை,

சாதிமறுப்புத் திருமணத்தை பதிவு செய்ய சாதி, மதத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

அம்பேத்கர் பெரியார் கலப்புத் திருமண நலச்சங்க செயலாளர் பொற்கொடி, மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்கள் தங்களின் திருமணத்தை பதிவு செய்ய விண்ணப்பிக்கும்போது மதம் மற்றும் ஜாதி உட்பிரிவுகளை குறிப்பிடுமாறு சார்–பதிவாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்கள் சாதி, மதங்களை கடந்து காதலித்து திருமணம் செய்கின்றனர். அவர்களிடம் மதத்தை கேட்பது சட்டவிரோதம்.

தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போது சாதி, மதத்தை விரும்பவில்லையென்றால் குறிப்பிட தேவையில்லை என 1973–ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சாதி, மதத்தை தெரிவிக்காத குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டும். இந்த அரசாணையின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தங்கள் குழந்தைகள் சாதி, மதம் இல்லா மனிதர்களாக வளர வேண்டும் என உயர்ந்த எண்ணத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.

இளைய தலைமுறையினரும் சாதி, மதத்தை கடந்து வாழ விரும்புகின்றனர். கல்விச் சான்றிதழ்களில் சாதி, மதம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு சலுகை பெறாமல் வாழ வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் திருமணத்தின்போது தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் 2009–ன்படி மதத்தையும், உட்பிரிவுகளையும் கட்டாயம் குறிப்பிட வேண்டிய நிலைவுள்ளது.

எனவே சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்களின் திருமணத்தை பதிவு செய்வதற்கு சாதி, மதத்தை தெரிவிக்க விரும்பவில்லையென்றால் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டியதில்லை என அரசாணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

பின்னர், இந்த மனு குறித்த தலைமை செயலாளர், பதிவுத்துறை கூடுதல் செயலாளர், பதிவுத்துறை ஐ.ஜி. ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் 8–ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.