மதுரை

தொடங்கப்பட்டு சில ஆண்டுகளே ஆனாலும் மதுரை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் என்னை ஆச்சரியப்படுத்துகிறது என்றும் வழக்குகளை விரைவாக முடிப்பதில் இந்த உயர்நீதிமன்றம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புகழ்ந்து தள்ளினார்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் 14–வது ஆண்டு தொடக்க விழா மகா வழக்கறிஞர் சங்கத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியது: “மதுரை ஒரு பாரம்பரியமான நகரம். இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை இங்கு அமைந்துள்ளது. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உயர்நீதிமன்ற கிளை தொடங்கப்பட்டது.

சில ஆண்டுகளே ஆனாலும் மதுரை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. வழக்குகளை விரைவாக முடிப்பதில் இந்த உயர்நீதிமன்றம் சிறப்பாக செயல்படுகிறது. இங்கு பணியாற்றும் நீதிபதிகளும் சிறந்த தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் வெளியான முக்கியமான தீர்ப்புகள் அனைத்தும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டவையே. நீதிபதிகளுக்கு வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சிறப்பான தீர்ப்புகளை வழங்க முடியும்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை நீதித்துறையில் பணியாற்றுபவர்கள் கவனத்தில் கொண்டு நீதிபதிகளும், வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்.

நீதித்துறையின் மாண்பை காக்க நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் போலவே மதுரைக் கிளையும் எனக்கு முக்கியமானது தான். இதில் பாரபட்சம் காட்டுவதற்கு எதுவும் இல்லை.

மதுரை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படும்” என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.ராஜா, ஆர்.மகாதேவன், புஷ்பாசத்தியநாராயணா, நிஷாபானு, ஜி.ஆர்.சுவாமிநாதன், மகா வக்கீல் சங்க தலைவர் தியாகராஜன், செயலாளர் பாரிராசன், பொருளாளர் ராமகிருட்டிணன், துணைத்தலைவர் சேதுபதி மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.