தமிழக அரசின் இணயதளத்தில் இருந்து அமைச்சர்களின் செல்போன் எண்கள், இ மெயில் முகவரிகள் நீக்கப்பட்டதற்கு, தமிழக அரசு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளதாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஊழல் குற்றச்சாட்டு கூறுவது என்பது பொத்தாம்பொதுவாக இருக்கக் கூடாது என்றும் தமிழக அமைச்சர்கள் கூறியிருந்தனர்.

நடிகர் கமல் ஹாசன், ஊழல் குறித்து, தமிழக அமைச்சர்களின் இ மெயில் மற்றும் செல்போன் எண்களுக்கு அனுப்பும்படி தனது ரசிகர்களுக்கு கூறியிருந்தார். இதையடுத்து, தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் இ மெயில் முகவரி மற்றும் செல்போன் எண்கள் மாயமாகின.

இந்த நிலையில், மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான பி.டி.ஆர்.பி.தியாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தமிழக அமைச்சர்களின் செல்போன் எண்கள் மற்றும் இ மெயில் முகவரிகள் திடீரென நீக்கப்பட்டுள்ன.

அரசின் செயல்பாடுகள் குறித்தும், அமைச்சர்களை தொடர்பு கொள்ளவும், முக்கிய தகவல் களமாக உள்ள அரசு இணையதளத்தில் எவ்வித காரணம் இன்றி அமைச்சர்களின் செல்போன் எண்கள், இ மெயில் முகவரி நீக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது என்றும், ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கும், அரசின் வெளிப்படை தன்மைக்கும் எதிரானது என்று அதில் கூறியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் விவரம் தெரிந்துதான் நீக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் விவரம் நீக்கப்பட்டது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.