எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மறு ஆய்வு வழக்குகளை நானே விசாரிக்கலாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தகவல்!
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மறு ஆய்வு வழக்குகளை நானே விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், கடந்த ஆண்டு அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை பட்டியலிட்டு விசாரித்து வருகிறார். மேலும் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரின் வழக்குகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தொடங்கினார்.
இதனிடையே, தங்கள் மீதான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு தடைகோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச். ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த நீதிபதிகள், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் தொடர்பான முடிந்து போன சொத்து குவிப்பு வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவெடுப்பார். தலைமை நீதிபதி இந்த வழக்குகளை எந்த நீதிபதிக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் என உத்தரவிட்டனர்.
நாடாளுமன்றத்தில் இன்று மாலை வெள்ளை அறிக்கை தாக்கல்!
இந்த நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மறு ஆய்வு வழக்குகளை நானே விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த வழக்குகள் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.