சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இதை இந்தியாவில் பார்க்க முடியும். நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்த சந்திர கிரகணம் நாளை நடக்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் காண முடியும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் தேபிபிரசாத் கூறி உள்ளார்

இதற்கிடையில், நாளை சந்திர கிரகணம் என்பதால், செப்டம்பர் 6ம்தேதி 'ஆவணி அவிட்டம்' அனுஷ்டிக்கப்படுகிறது.

ஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 22ம் தேதி (நாளை)  சந்திர கிரகணம் இரவு 10.51 மணிக்கு ஆரம்பித்து, இரவு 12.49 மணிக்கு முடிகிறது.

இதனால், நாளை நடைபெற இருந்த, 'ஆவணி அவிட்டம்' நிகழ்ச்சி அடுத்த மாதம் வரும் செப்டம்பர் 6ம் தேதிக்கு நடைபெறும் என காஞ்சி சங்கர மடம் அறிவித்துள்ளது.

இதுபற்றி, காஞ்சி சங்கர மடம் பஞ்சாங்க சபைத்தலைவரும் தர்ம சாஸ்திர நிபுணருமான சுந்தரராம வாஜ்பாய் கூறியதாவது.

'இந்தக் குழப்பம் எப்படி வந்தது. சிலர் தங்கள் தரப்பு பஞ்சாங்கத்தை தயாரிக்கும்போது முழுவதும் ஆலோசிக்காமல் அறிவித்துவிட்டனர். இதனால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜோதிடத்தில் சாஸ்திரத்தைக் கணிக்கும்போது  வானியலை கருத்தில்கொண்டு கணிப்பது திருக்கணிதம்.

வானியலோடு வரருச்சி மகரிஷி எழுதிய தர்மசாஸ்திரம் சொல்வதையும் கருத்தில்கொண்டு கணிப்பது வாக்கிய கணித முறை ஆகும்.

கடந்த ஆண்டு விஜயவாடாவில் காஞ்சி பெரியவா தங்கினார். அப்போது, இந்தியா முழுவதும் இருந்து வந்த 22 கர்த்தாக்களும், 8 தர்மசாஸ்திர வல்லுநர்களையும் வரவழைத்து அவர்கள் முன்னிலையில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தார்.

அப்போது, பெரியவா ஒப்புதலுடன் செப்டம்பர் 6ம் தேதிதான் ஆவணி அவிட்டம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதன்பிறகு கணித்த சிலர் வெளியிட்ட பஞ்சாங்கத்தால் இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. எனவே 'ஆவணி அவிட்டம்' நிகழ்ச்சி அடுத்த செப்டம்பர் மாதம் 6ம் தேதியில் நடைபெறும் என காஞ்சி சங்கர மடம் சார்பாக தெரிவித்து கொள்கின்றேன்'' என்றார்.