சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. திண்டுக்கல் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையான இச்சாலை வழியாக தமிழகம் -கர்நாடக மாநிலத்திற்கு இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில் இன்று காலை மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு லாரி பல்லடம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. இந்த லாரியை மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். 25-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றிக்கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற கிளீனர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஓட்டுநரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.