தூத்துக்குடி 

தூத்துக்குடி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி கிளை, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் சார்பில்,நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடைப்பெற்றது. 

இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். அந்தோணி ராஜ், வெள்ளைச்சாமி, பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் முனியசாமி, மாநகர செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்த போராட்டத்தில் "தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி துப்புரவு பணியாளர்கள், சுய உதவிக்குழு துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி நாள் ஒன்றுக்கு ரூ.624.16 வழங்கப்பட வேண்டும். 

அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி, சுயஉதவிக்குழு ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக அடிப்படை ஊதியம் ரூ.500–ம், பஞ்சப்படி ரூ.124.16-ம் சேர்ந்து ரூ.624.16 வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். 

அதன்பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வலியுறுத்தி மனு ஒன்றைக் கொடுத்தனர். இந்தப் போராட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.