கடந்தாண்டு உள்ளாட்சித்தேர்தலை நடத்துவதில் உள்ள விதிமீறல்களை நிவர்த்திசெய்து நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டு தேர்தலை தனிநீதிபதி தள்ளிவைத்தார். 

உரிய திருத்தங்களுடன் டிசம்பர் 31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் குவாடி ரமேஷ், பார்த்திபன் அமர்வு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இந்த வழக்கு தனிநீதிபதிகள் மூர்த்தி மோகன்ராவ், எஸ்.என்.சுப்பிரமணியன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏற்கெனவே அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, உத்தரவில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்த சிரமம் இருப்பதால் காலஅவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

விதிமுறைகளை சரிசெய்து மார்ச் 31-க்குள் நடத்தி முடிப்பதாக மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்தது. ஆனால், நீதிபதிகள் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். 

ஏற்கெனவே டிசம்பர் 31-க்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ள நிலையில், மேலும் அவகாசம் கோருவது சரியல்ல என்று தெரிவித்தனர். 

தேர்தல் ஆணையம் தரப்பில் மனுத்தாக்கல் செய்தவர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக தெரிவித்தனர். 

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் கோடிக்கணக்கான தேர்தல் அடையாள அட்டைகளை பதிவேற்றும்போது, வெறும் 5 லட்சம் எண்ணிக்கை உள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏன் பதிவேற்றம் செய்ய முடியாது? தேர்தல் ஆணையம் இறுதி செய்த வேட்பாளர்களில் மனுக்களை மட்டும் பதிவேற்றலாமே? 

ஏற்கெனவே அதிக அவகாசம் கொடுத்துவிட்டதால், மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் கொடுக்க முடியாது. மேற்கண்ட நடைமுறைகளை சரிசெய்து எப்போது தேர்தல்நடத்த முடியும் என்பது பற்றி வரும் 30-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள் என்று தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.