குஷ்பு தொலைக்காட்சியில் பேட்டி அளித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த விஷயத்தை இத்துடன் முடித்து கொள்ளுங்கள் என கூறி, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்ரசர் ஜகா வாங்கி கொண்டார்.
மொழி வாரியாக தமிழ்நாடு பிரிக்கப்பட்டு 60 ஆண்டு நிறைவானதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், சத்தியமூர்த்தி பவனில், மொழிவழி மாநிலம் அமைக்க போராடிய தலைவர்கள் காமராஜர், மார்ஷல் நேசமணி, ம.பொ.சிவஞானம், கே.விநாயகம், உருவ படங்களுக்கு கட்சியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, சிறுபான்மை பிரிவு முன்னாள் மாநில தலைவர் முகமது சித்திக், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில செயலாளர் எஸ்.கந்தராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி தலைமையில், மகிளா காங்கிரஸ் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா, செயலாளர் ஹசீனா சையத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சு.திருநாவுக்கரசர், குமரி அனந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது,திருநாவுக்கரசர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரிந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளிடம் கருத்து கேட்க உள்ளேன். அதன் பிறகு, கட்சியின் மாநில, மாவட்ட அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். 11ம் தேதி புதுச்சேரி, 12ம் தேதி தஞ்சை, 15ம் தேதி அரவக்குறிச்சி, 16ம் தேதி திருப்பரங்குன்றத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்யபோகிறேன்.
‘குஷ்பு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி குறித்து, நானும் கட்சி மேலிடத்தில் புகார் தெரிவிக்கவில்லை. மேலிடமும் அவரிடம் விசாரணை நடத்து கூறவில்லை. நான், அவரிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. எனவே இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள்.
பொது சிவில் சட்டம் குறித்து சு.திருநாவுக்கரசுக்கு, குஷ்பு பாடம் நடத்த வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதகிருஷ்ணன் கூறுகிறார். அதுபோன்ற தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு பதில் கூற விரும்பவில்லை. நான் ஏற்கனவே 50 ஆண்டுகள் அரசியல் பாடம் படித்துள்ளேன். அவர் வேண்டுமானால் எங்காவது பாடம் படிக்கட்டும் என்றார்.
