அனிதாவிற்கு நேர்ந்ததைப்போல், எங்கள் யாருக்கும் நிகழக்கூடாது என நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் +1 மற்றும் +2 வகுப்பு மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூடாது என்றும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் சென்னை, நுங்கம்பாக்கம், ராஜாஜி சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எங்கள் போராட்டத்தை ஏன் தடுக்குறீர்கள் என்று போலீசாரிடம் மாணவிகள் கேள்வி எழுப்பினர்.

போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாணவிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். 

"ஜல்லிகட்டுக்கு பீட்டா! அனிதா சாவுக்கு நீட்டா!"

"வேண்டாம்... வேண்டாம்... நீட் தேர்வு வேண்டாம்!" 

"தடை செய்... தடை செய்... நீட் தேர்வை தடை செய்!" 

என மாணவிகள் முழக்கமிட்டனர்.