Life imprisonment for killing his wife and buried Action verdict after five years

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மனைவியை எரித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்தும் தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள நடுவிற்பட்டி முத்து இருளப்பபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (46). இவர் அந்த பகுதியில் உணவு விடுதி நடத்தி வந்தார். இவருடைய மனைவி மாரிலட்சுமி (33).

குருசாமி ஓட்டல் நடத்தி சம்பாதித்த பணத்தை, அவருடைய உறவினர்களுக்குச் செலவு செய்து வந்தார். இதனையறிந்த மாரிலட்சுமி கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

2012-ஆம் மே மாதம் 11 ஆம் தேதி இரவு வழக்கம்போல் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோவம் அடைந்த குருசாமி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மாரிலட்சுமி மீது ஊற்றி தீவைத்து கொளுத்தி விட்டு தப்பிச் சென்று விட்டார்.

அக்கம்பக்கத்தினர் மாரிலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து எட்டயபுரம் காவலாளர்கள் வழக்கு பதிவு செய்து குருசாமியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆஜர் ஆனார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகர், குற்றம் சாட்டப்பட்ட குருசாமிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.