Latha Rajinikanth case was dismissed

மாநகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை தொகை உயர்த்தப்பட்டது தொடர்பாக லதா ரஜினிகாந்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் சார்பில் மோகன் மோனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், லதா ரஜினிகாந்த் ஆழ்வார்பேட்டையில் மாநகராட்சி ஒதுக்கீட்டில் கடை உள்ளது. இந்த கடையில் டிராவல்ஸ் நடத்த வருகிறோம். இந்த கடைக்கு கடந்த ஜூன் மாதம் வரை ரூ.3702 மட்டும் வாடகையாக வசூலிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி கடையின் வாடகை ரூ.21.160 ஆக சென்னை மாநகராட்சி அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் நோட்டுகள் செல்லாது போன்ற பிரச்சனைகளால் டிராவல்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாடகை உயர்த்தியுள்ளது எங்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எனவே வாடகையை உயர்த்தும் மாநகராட்சியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், தமிழக அரசின் அரசாணை 92-ன் கீழ் ஒவ்வெரு 9 ஆண்டுகளுக்கும் ஒரு முறை வாடகை மாற்றம் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில்தான் மனுதாரரின் கடைக்கும் வாடகைத் தொகை மாற்றப்பட்டுள்ளது. அரசாணை 92-ஐ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி வைத்தியநாதன், லதா ரஜினிகாந்த் சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.