Last year there was no legal-oriented problem of any religious or caste - District Superintendent ...
கரூர்
கடந்த ஆண்டில் கரூர் மாவட்டத்தில் மத ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ எந்தவொரு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் தெரிவித்தார்.
கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் நேற்று அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது, "கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் பெரியளவில் மத ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை.
கடந்தாண்டில் நடந்த 13 கொலை வழக்குகளில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அனுமதியின்றி சாராயம் விற்றதாக 2440 பேர் கைது செய்யப்பட்டு ரூ. 1.18 இலட்சம் சாராய புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
கடந்தாண்டு திருடு போன ரூ.1.75 இலட்சம் மதிப்புள்ள சொத்தில் ரூ. 1.46 இலட்சம் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2017-ல் பதிவான 314 சாலை விபத்துகளில் 340 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 2016-ல் 377 பேர் இறந்ததைக் காட்டிலும் குறைந்ததாகும்.
கடந்தாண்டில் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாக 2588 வழக்குகளும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 3404 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 83170 வழக்குகளும் மற்ற வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் 1 இலட்சத்து 94 ஆயிரத்து 878 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
வாகன விதி மீறியவர்களிடம் இருந்து ரூ. 2.78 இலட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 7 ஆயிரத்து 99 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.
