சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் 5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணாநதி நீரை தமிழகத்திற்கு கூடுதலாக திறந்து விடுவது குறித்து, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு, கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீரை கூடுதலாக திறந்து விட ஆந்திர அரசு ஒப்புதல் ‌அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கிருஷ்ணா நதியில் 5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழகம் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் இதுபற்றி பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்து இருந்தார்.

தற்போது தமிழகத்துக்கு கண்டலேறு அணையில் இருந்து கூடுதலாக 300 கனஅடி நீரை ஆந்திரா அரசு திறந்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து ஏற்கெனவே 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.