ஆணவக்கொலையில் கணவரை இழந்த கௌசல்யா மறுமணம்...!
உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌவுசல்யா, நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார்.
உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌவுசல்யா, நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கெளசல்யா என்பவரைக் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதியன்று, பட்டப்பகலில் உடுமலையில் வைத்து சங்கர் மற்றும் கெளசல்யா இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி கெளசல்யா படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று குணமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கௌசல்யாவின் தாய், தந்தை, தாய் மாமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த 2017 டிசம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. அதன்படி, கௌவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மற்றொரு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சங்கரை கொன்றவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என இறுதி வரை போராடி வெற்றி பெற்றவர்.
இந்நிலையில் இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் கௌசல்யா இரண்டாவது திருமணம் நடைபெற்றது. கௌசல்யா கோவையில் பறை இசைக்குழு நடத்திவரும் சக்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரிடம் தான் கெளசல்யா பறை இசைக் கலையை கற்றார். இந்த திருமணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்னன் தலைமையில் நடைபெற்றது.