பாலக்காடு அருகே புத்தாண்டு தினத்தன்று அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர்கள் ரியாஷ் மற்றும் அர்ஷத் ஆகியோர் தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இரு சக்கர வாகனத்தில் கேரளா சென்றுள்ளனர். 

பின்னர் அதிகாலை அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் இருந்து கோவை திரும்பினார்கள். தத்த மங்கலம் அருகே வந்த போது வண்ணா மடையில் இருந்து ஆலப்புழாவுக்கு ஒரு வேன் சென்றது. அப்போது வேன் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.